Object Image

இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)

இறுதி இராவுணவு (The Last Supper) என்பது இயேசு கிறிஸ்து துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாகக் கொண்டு லியொனார்டோ டா வின்சி என்னும் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியர் வரைந்த தலைசிறந்த சுவரோவியம் ஆகும். இறுதி இராவுணவை சில கிறித்தவர்கள் இராப்பந்தி அல்லது இராபோஜனம் என்றும் கூறுவதுண்டு.

லியொனார்டோ டா வின்சிக்குப் புரவலராக இருந்த லுடோவிக்கோ ஸ்ஃபோர்சா (Ludovico Sforza) என்னும் மிலான் குறுநில ஆளுநரும் அவர்தம் மனைவி பெயாட்ரீசு தெஸ்தே (Beatrice d'Este) என்பவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, டா வின்சி இச்சுவரோவியத்தை வரைந்தார்.

யோவான் நற்செய்தியில் இயேசு தம் சீடர்களோடு இறுதி முறையாக உணவு அருந்திய நிகழ்ச்சிபற்றி விவரிக்கும் காட்சியை அடிப்படையாகக் கொண்டு டா வின்சி இந்த ஓவியத்தை உருவாக்கினார். இயேசு அந்த இறுதி இராவுணவின்போது நற்கருணை விருந்தை ஏற்படுத்தினார் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனர். எனவே இந்த இறுதி இராவுணவு "ஆண்டவரின் திருவிருந்து" (Supper of the Lord) என்றும் அழைக்கப்படுகிறது.

c. 1495-c. 2007
Tempera on gesso, pitch and mastic
Q128910
படம் மற்றும் உரை உபயம் Wikipedia, 2023